மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி செலுத்தும் உழைப்பையும், பங்களிப்பையும், விசுவாசத்தையும் பார்க்கையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான தகுதியுடையவர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
‘ஐபிஎல் 2024’ சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளனர். சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான அணிகளில் கேப்டன், வீரர்கள் மாற்றப்பட்டுள்ளது இதற்கு காரணம்.
“விராட் கோலி, இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்ல தகுதியானவர். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காகவும், ஆர்சிபி அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் அதிக வெற்றிகளை தேடி தந்தவர்.
இந்த சீசனுக்காக தோனி தீவிரமாக தயாராகி வருகிறார். இது அவரது கடைசி சீசனாக இருக்குமா என என்னால் சொல்ல முடியாது. ஆனால், அவர் ஃபிட்டாக உள்ளார். மஞ்சள் ஜெர்சியில் ரசிகர்களை அவர் நிச்சயம் மகிழ்விப்பார். சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.